திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்ற பனியன் நிறுவன தொழிலாளியின் செல்போன் எண்ணுக்குச் சமீபத்தில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட சில லாட்ஜ்களில் பெண்கள் இருப்பதாகவும், பணம் அனுப்பினால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பி ஆசைப்பட்ட சந்தோஷ்குமார், அதில் குறிப்பிட்டிருந்த செயலி மூலம் சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து, அவரிடம் இருந்து பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக லாட்ஜ் விவரங்களையும் அனுப்பி வைத்து, க்யூஆர் கோடு மூலம் சந்தோஷ்குமாரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணத்தைப் பெற்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, மேலும் ரூ.2 ஆயிரம் அனுப்புமாறு அவர்கள் மீண்டும் வற்புறுத்திக் கேட்ட போதுதான், தான் ஏமாற்றப்படுவதைச் சந்தோஷ்குமார் உணர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் உடனடியாகத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அதிரடி விசாரணை நடத்திய போலீசார், இந்த ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த உடுமலையைச்சேர்ந்த வெற்றிவேல் (41), சக்திவிக்னேஷ் (24) மற்றும் கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த கோகுல்குமார் (35), அருண்பிரசாத் (26) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
இவர்களில் கோகுல்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதும், இவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் மூலம் இதேபோல் பலரிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
