ஜப்பானில் கோடைகாலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கொடூரமான வெப்ப அலை வீசி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அம்மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனிதர்களே நேரடியாக உள்ளே சென்று அமர்ந்து கொள்ளக்கூடிய ‘மனித அளவிலான ஃபிரிட்ஜ்’ ஒன்றை உருவாக்கியுள்ளது. தொழில்துறை உபகரண விநியோக நிறுவனமான ‘டிரஸ்கோ நகாயாமா’  விற்பனை செய்யும் இந்த ‘டூ ஹையமன் பாக்ஸ்’ குளிரூட்டும் கூண்டு, ஜப்பானிய வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின்  மாதிரியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘மனித ஃபிரிட்ஜ்’-ன் உட்புற வெப்பநிலை எப்போதும் 15 டிகிரி செல்சியஸிலேயே பராமரிக்கப்படுகிறது. இதனால் இதற்குள் காலடி எடுத்து வைத்தவுடனேயே, ஒரு பெரிய ஃபிரிட்ஜிற்குள் நுழைந்தது போன்ற அனுபவம் உடனடியாகக் கிடைக்கிறது. இதில் உள்ள நாற்காலியில் அமர்ந்ததும், சுமார் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்ந்த காற்று நேரடியாக மனிதனின் தலை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளில் வீசி உடலை உறைநிலைக்குக் கொண்டு செல்கிறது. இதன் மூலம் பயன்பாட்டாளர்கள் வெறும் 5 நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்புவதுடன், 10 நிமிடங்களில் வெப்பக் களைப்பிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும், கடுமையான வெயிலிலும் தவிர்க்க முடியாமல் வெளியே உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளில் பணியாற்றுபவர்களுக்காகவே இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சுலபமாக உருட்டிச் செல்ல ஏதுவாகச் சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்திற்குத் தனிப்பட்ட இன்ஸ்டாலேஷன் எதுவும் தேவையில்லை. மேலும், இது சாதாரண ஸ்பாட் ஏர் கண்டிஷனர்களை விடப் பாதியளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. மனித உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்து போவதைத் தடுக்க, 20 நிமிடங்களில் தானாகவே இயங்கும் ‘ஆட்டோ ஷட் ஆஃப்’ அம்சமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டோக்கியோவில் ஒரே நாளில் 48 பேர் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும் வெயில் நாட்களைக் குறிக்க ஜப்பான் அரசு புதிய சொற்களையே அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் இந்த வெப்பப் பேரிடருக்கு மத்தியில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இத்தகைய கண்டுபிடிப்புகள் வரவழைக்கப்படுகின்றன. தற்போது வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு சந்தைக்கு வந்துள்ள இந்த ‘மனித ஃபிரிட்ஜ்’-ன் விலை ஜப்பான் மதிப்பில் 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹8.8 லட்சம்) ஆகும்.