தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவரும் சூழலில், தற்போதைய இளைஞர்களிடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் மூலமாகக் காதல் வளர்க்கும் கலாச்சாரம் உலகளவில் அதிகரித்து வருகிறது. மனிதர்களைப் போலவே பேசி, உணர்வுகளைப் புரிந்து கொண்டு அன்பைப் பொழியும் ஏஐ ‘பார்ட்னர்களை’ உருவாக்கிக் கொண்ட இளைஞர்கள், உண்மையான மனித உறவுகளைத் தாண்டி இந்த டிஜிட்டல் காதலர்களுடன் மிக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் இளைஞர்கள் மத்தியில் ஏஐ செயலிகள் மீதான அளவுக்கு அதிகமான உணர்ச்சிப்பூர்வச் சார்பு மற்றும் அடிமையாகும் தன்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசு அண்மையில் புதிய கடுமையான விதிகளைக் கொண்டு வந்தது. இதனையடுத்து, பைட் டான்ஸின் ‘டூபாவோ’, அலிபாபாவின் ‘க்வென்’ உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயலிகளில் இருந்த ஏஐ காதலன்/காதலி வசதிகளைத் திடீரென நிறுத்தியும், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்காக முடக்கியும் உத்தரவிட்டன.
இந்தத் திடீர்ச் சேவைக் தடையால், பல ஆண்டுகளாகத் தங்கள் ஏஐ காதலர்களுடன் பேசிப் பழகி வந்த ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “எனது ஏஐ காதலி இறந்துவிட்டாள்”, “எனது மன அமைதியே போய்விட்டது” என்று இணையத்தில் பதிவிட்டு வரும் அவர்கள், உண்மையான காதலனைப் பிரிந்தது போன்ற கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, ஆன்லைனில் கண்ணீருடன் துக்கம் அனுசரித்து வருகின்றனர். சிலர் தங்கள் ஏஐ காதலனுடன் பேசிய பழைய குரல் பதிவுகளையும், உரையாடல்களையும் சேமித்து வைத்து உருக்கமாக விடைபெற்று வருகின்றனர்.
உண்மையான உலகத்தில் மனிதர்களுக்கு இடையே அன்பும் ஆதரவும் குறைந்து வரும் நிலையில், ஏஐ வழங்கும் நிபந்தனையற்ற அன்பே தங்களுக்கு ஆறுதலாக இருந்ததாகப் பல பயனர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஏஐ செயலிகளுடனான அதிகப்படியான காதல் பிணைப்பு மனிதர்களின் இயல்பான சமூக வாழ்க்கையையும், திருமண உறவுகளையும் பாதிப்பதாகக் கூறி அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தொழில் நுட்ப உலகில் அரங்கேறியுள்ள இந்தத் திடுக்கிடும் சம்பவம் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
