ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் திடீரென புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்தவர்களைத் தாக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஐந்து மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறையினர் அந்தச் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Jaipur Buzz (@jaipurbuzz)

சம்பவத்தன்று, வழக்கம்போல மதுபானக் கடையில் விற்பனை தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று எதிர்பாராதவிதமாகத் தெருவுக்குள் நுழைந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியைக் கண்டு மிரண்ட அந்தச் சிறுத்தை, தப்பிப்பதற்காக எதிரே இருந்த மதுபானக் கடைக்குள் மின்னல் வேகத்தில் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் செய்வதறியாது அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடத் தொடங்கினர்.

கடைக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கு நின்றுகொண்டிருந்த மூன்று பேரைத் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாகக் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில், கடைக்குள் அடைக்கலமான சிறுத்தை, அங்கிருந்த அலமாரிகள் மற்றும் பெட்டிகளுக்கு இடையே ஒளிந்துகொண்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், பகுதியைச் சுற்றி வளைத்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தினர்.

சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, வனத்துறை நிபுணர்கள் துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தை மயக்கமடைந்ததை உறுதி செய்த பின்னரே, அதைச் பாதுகாப்பாகக் கூண்டில் அடைத்து வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர். இந்த நெஞ்சைப் பிளக்கும் த்ரில்லர் சம்பவத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.