வளைகுடா பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ஈரானுக்குச் சொந்தமான, உலக அளவில் புகழ்பெற்ற எண்ணெய் வளம் மிக்க ‘கார்க்’ தீவைக் கைப்பற்ற அமெரிக்கா தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில், இந்த முக்கியப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ராணுவம் தரைவழித் தாக்குதலுக்கான வியூகங்களை ரகசியமாக வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டம் குறித்த தகவல் கசிந்ததைத் தொடர்ந்து, ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகே அமெரிக்காவிற்கு மிகக் கடுமையான மற்றும் பகிரங்கமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்மாயில் பாகே பேசுகையில் அமெரிக்க வீரர்கள் தரைவழியாகத் தாக்குதல் நடத்த வந்தால், அவர்களை ‘வரவேற்க’ ஈரான் நாட்டு மக்கள் ஆயத்தமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையைத் தாண்ட நினைக்கும் அமெரிக்கப் படைகள் வளைகுடா மண்ணில் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவர்களின் வருகைக்காகவே ஈரான் மக்கள் அந்தப் பகுதிகளில் ஆவலோடு காத்துள்ளனர் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் ஈரானுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா நாடகமாடினாலும், மறுபுறம் வான், கடல் மற்றும் தரை என முப்படைகளின் வழியிலும் ஈரானை முழுமையாக நெருக்கும் வேலைகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த இரட்டை வேடமும், தரைவழித் தாக்குதலுக்கான தற்போதைய நகர்வுகளும் மத்திய கிழக்கு பகுதியில் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளன.
