மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குஸெஸ்தான் மாகாணத்தில், கட்டுமானப் பணியில் இருக்கும் ‘டார்கோவின்’ அணுமின் நிலையத்தைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் திடீர் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பும் சர்வதேச அளவில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. ஏவுகணைகள் மூலம் அணு உலை வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகப் போர்நிறுத்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச விதிகளை முற்றிலுமாக மீறி அமெரிக்கா இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஈரானின் உயர் தலைவர்கள் மற்றும் ராணுவப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஈரானின் முக்கியப் பொறுப்பில் உள்ள மொஜ்தபா, அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு மிக விரைவில் ‘மறக்க முடியாத பாடம் கற்பிப்போம்’ எனச் சூளுரைத்துள்ளார். ஈரானின் இறையாண்மை மீதான தாக்குதலைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், தகுந்த நேரத்தில் இதற்கான கடுமையான பதிலடியை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கெனவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் பதற்றம் நிலவி வந்த சூழலில், தற்போது அணு உலை அமைப்பையே அமெரிக்கா இலக்கு வைத்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த நேருக்கு நேர் மோதல் போராக உருவெடுக்குமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளன.
