பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது. என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி தாபா’ ஆகியவற்றுக்கு இடையேயான வாடிக்கையாளர் பிடிக்கும் போட்டியில் ஏற்பட்ட மோதல், ரத்தக்களறியான வன்முறையாக வெடித்துள்ளது.
இந்தத் திடீர் மோதலின் போது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்கித் தள்ளியதில் பாதிக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, யுபி தாபாவின் முதிய மேலாளரான ராம் வினோத் தாகூர் என்பவரைத் தனிமைப்படுத்தி எதிர்தரப்பினர் நடத்திய அநாகரிகமான செயல்கள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது.
மோதலின் போது தலைமறைவான யுபி தாபா உரிமையாளரின் உறவைச் சுட்டிக்காட்டி, அங்கிருந்த முதிய மேலாளர் ராம் வினோத் தாகூரைப் பிடித்து நாற்காலியில் அமரவைத்து இரும்புப் பைப் மற்றும் லாத்திகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட கும்பல், அந்த முதியவரை மிரட்டி வலுக்கட்டாயமாகத் கையை தூக்கி காட்டச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வெறிச் செயலை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்தச் காட்சிகள் தற்போது காட்டுத்தீ போலப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உடனடியாக விழித்துக்கொண்ட காவல்துறையினர், இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யுபி தாபா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் எம்பி தாபா உரிமையாளர்கள் மீதும், மறுபுறம் எம்பி தாபா தரப்பில் கொடுக்கப்பட்ட எதிர்ப்ப புகாரின் பேரிலும் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
வைரலான வீடியோவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
