முறையான விசா இல்லை என்று காரணம் காட்டி, கேரளாவைச் சேர்ந்த தம்பதியினரின் 6 மாத பச்சிளம் குழந்தையை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது. விமான நிலையத்தில் அனைத்துச் சோதனைகளும் முடிக்கப்பட்டு, போர்டிங் பாஸ் வழங்கப்பட்ட பின்னரும் கடைசி நேரத்தில் குழந்தையை ஏற விடாமல் தடுத்த விமான நிறுவனத்தின் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பயணிகளின் அவஸ்தைகளையும் மன உளைச்சலையும் துளியும் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்ட நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட தம்பதியினர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம், விமான நிறுவனத்தின் இந்த அநாவசியத் தடையால் அந்தக்குடும்பம் பட்ட இன்னல்களையும் மன உளைச்சலையும் விரிவாக ஆராய்ந்தது. விசா தொடர்பான அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும், பொறுப்பற்ற முறையில் கடைசி நேரத்தில் பயணத்தைத் தடுத்தது பெரும் சேவைக்குறைபாடு என்று நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அபராதத் தொகையாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் உடனடியாக 10 லட்ச ரூபாவை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணங்களின் போது இதுபோன்ற முறையற்ற மற்றும் அலட்சியமான செயல்களில் ஈடுபடும் சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சாதாரண பயணிகளை ஏளனமாக நினைத்து இதுபோன்று அவமரியாதையாக நடக்கும் நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தண்டனை ஒரு பாடம் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். தற்பொழுது வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்புப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், விமானப் பயணத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.