வார விடுமுறையைக் கழிப்பதற்காகச் சாகசப் பயணங்களை மேற்கொள்வது இப்போதைய இளைஞர்களிடையே பெரும் ஆர்வமாக உருவெடுத்துள்ளது. ஆனால், உரிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பொழுது, அத்தகைய சாகசப் பயணங்கள் ஆபத்தான விபத்துகளில் போய் முடிகின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கர்நாடகாவில் ஒரு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த 24 வயதான குபேர் சுர்பூர் என்ற இளைஞர், தனது சகோதரருடன் சேர்ந்து தண்டேலியில் உள்ள பிரபல ‘ஸ்டார்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா மையத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜிப்லைன் சாகச விளையாட்டில் அவர் உற்சாகமாகப் பங்கேற்று, கயிற்றில் தொங்கியபடி நடுவானில் மிதந்து ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் சென்று கொண்டிருந்தார்.
அவர் சுமார் 40 அடி உயரத்தில் காற்றில் பறந்தபடி பயணித்துக் கொண்டிருந்த அந்த நொடியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது உடலில் இணைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பூட்டு திடீரென அறுந்துபோனது. இதனால் நிலைகுலைந்த குபேர், கட்டுப்பாட்டை இழந்து 40 அடி உயரத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் தரையில் தூக்கி வீசப்பட்டார். இதைச் சற்று எதிர்பாராத அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகள், அதிர்ச்சியில் உறைந்து போய்க் கூச்சலிட்டனர்.
இந்தக் கோர விபத்தில் குபேர் சுர்பூரின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகளும் நரம்பு மண்டலத்தில் காயங்களும் ஏற்பட்டன. அவர் மீட்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் மீராஜ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிசார்ட் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பான காணொளி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாகச விளையாட்டு மையங்களில் பாதுகாப்புத் தரக்கட்டுப்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது
