சர்வதேச கிரிக்கெட்டில் தனிநபர் சாதனைகள் மற்றும் மைல்கற்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அடிக்கடி விமர்சித்து வரும் நிலையில், அதற்குத் தனது ‘கிளாசிக்’ பாணியில் ராகுல் டிராவிட் கொடுத்துள்ள பதிலடி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், “சர்வதேச கிரிக்கெட்டில் தனிநபர் மைல்கற்கள் மற்றும் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று கௌதம் கம்பீர் கூறுகிறாரே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ராகுல் டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தனது வழக்கமான நிதானத்துடனும், அதே சமயம் அழுத்தமாகவும் பதிலளித்த டிராவிட், கம்பீரின் பெயரை எங்கும் குறிப்பிடாமல் அவரது வாதத்தை முற்றிலும் மறுத்து வறுத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், “இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டில், அடுத்த தலைமுறையினர் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள நிச்சயம் ‘ஹீரோக்கள்’ தேவை. ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பௌலரோ படைக்கும் சாதனைகளும், அவர்கள் எட்டும் மைல்கற்களும்தான் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கின்றன. இந்தச் சாதனைகளை எப்படி முறியடிப்பது, அதற்கான நுணுக்கங்களை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதை இளம் வீரர்கள் இந்த மைல்கற்களைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே, இளம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாகவும், ஐகானாகவும் மாறுவதற்கு மைல்கற்களை எட்ட வேண்டியது மிகவும் அவசியம்” என்று விளக்கியுள்ளார்.

தொடர்ந்து பேசிய டிராவிட், கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் குறித்தும் பேசினார். “ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இங்கே சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட முடியாது. ஒரு வீரரின் அசாத்தியமான திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளும்தான் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அப்படிப்பட்ட சிறப்பான ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள்தான் ஒரு வீரரை சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடுகிறார்கள்” என்று டிராவிட் தெரிவித்துள்ளார். கம்பீரின் பெயரை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், அவரது கருத்துக்கு டிராவிட் தனது பாணியில் நாகரீகமாகப் பதிலடி கொடுத்துள்ள விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.