விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும் கதவைச் சிறிது திறந்து வைத்துவிட்டு வாசலின் அருகே படுத்திருந்ததாகத் தெரிகிறது.

அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவர் மீதும் திடீரெனப் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தீ மளமளவெனப் பரவியதால் இருவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த சாந்தியின் மகன் சந்தீப்குமார், துணிச்சலாகச் செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து தீயை அணைத்தான்.

பலத்த தீக்காயமடைந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த சூப்பிரண்டு ‌மற்றும் கூடுதல் போலீஸ் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்த முத்து (60) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த முத்துவை அதிரடியாகக் கைது செய்து, முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.