கல்வியில் சிறந்து விளங்கி, தங்கப்பதக்கம் வென்று, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 23 வயது பொறியாளர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

கான்பூரின் குஜைனி பகுதியில் வசித்து வந்த ஆனந்த் குமார், கடந்த 2024-ம் ஆண்டு மின் பொறியியல் படிப்பை முடித்தவர். கல்வியில் மிகச் சிறந்த மாணவரான அவர், தனது கல்லூரியில் ஆளுநர் ஆனந்திபென் படேல் கையால் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.

தனது படிப்பை முடித்த கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், அரசுப் பணி கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது நீண்ட நாள் கனவாக இருந்துள்ளது.

இதற்காக அவர் சுமார் 50 முறை பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் தோல்வியே மிஞ்சியுள்ளது. இதன்பின்னர் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். பணிக்கு வந்த வீட்டு வேலை செய்பவர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினருக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உருக்கமான கடிதம்:

அந்த அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதம், அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர் தனது தந்தையிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.

“என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று எழுதியிருந்தார். ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை அந்த கடிதத்தில் பலமுறை எழுதப்பட்டிருந்தது, அவரது மனவேதனையை வெளிப்படுத்தியது.

குடும்பத்தினர் அதிர்ச்சி:

ஆனந்தின் தந்தை ராஜ்குமார் மற்றும் தாத்தா, ஆனந்தின் மூத்த சகோதரனின் திருமண ஏற்பாடுகளுக்காக பீகார் சென்றிருந்தனர். ஆனந்தும் அவர்களுடன் செல்ல வேண்டியதுதான், ஆனால் கடைசி நேரத்தில் தான் வரவில்லை என்று கூறி தங்கியுள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அரசுப் பணி மீதான அதீத அழுத்தம் மற்றும் தொடர் தோல்விகள் ஒரு பிரகாசமான மாணவனின் உயிரைப் பறித்துள்ளது, கல்வித்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.