இந்திய ரயில்வேயில் கடந்த நான்கு ஆண்டுகளில் கோடிக்கணக்கான போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் காணாமல் போனது பெரும் பேசுபொருளாகி வந்தது. “இவ்வளவு பொருட்களும் எங்கேதான் போகின்றன?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, ஒரு நகைச்சுவையான வீடியோ விடை தேடிக் கொடுத்துள்ளது.

இணையதளவாசிகள் இதைப் பார்த்துவிட்டு, “ரயில்வேயின் காணாமல் போன துணிகளுக்கான துப்பு கிடைத்துவிட்டது” என மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

நடந்தது என்ன?

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், முதியவர் ஒருவர் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் அணிந்திருக்கும் சட்டையைக் கவனித்தபோதுதான் நெட்டிசன்களின் கண்ணில் பட்டது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

அந்தச் சட்டையின் வெள்ளை மற்றும் நீல நிறக் கோடுகள், இந்திய ரயில்வேயின் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகளின் டிசைனைப் போலவே அச்சு அசலாக இருக்கின்றன. மேலும், அந்தச் சட்டையில் ‘வெஸ்டர்ன் ரயில்வே’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்ட இணையதளவாசிகள், “ரயில்வேயின் சொத்து இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது!” என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இணையத்தின் கிண்டல் மழை:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. “இது ரயில்வேயின் இன்வென்டரியில் இருக்க வேண்டிய பொருள் அல்லவா?” என்றும், “இந்த முறை காணாமல் போன பெட் ரோல்களின் கணக்கு கிடைத்துவிட்டது” என்றும் பலரும் கமெண்ட்களை அள்ளித் தெளிக்கின்றனர்.

அதே சமயம், இது வெறும் தற்செயலான ஒற்றுமைதான் என்பதையும் மறுக்க முடியாது. சந்தையில் இதுபோன்ற டிசைன்களில் துணிகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Ranjeet Singh (@ranjeet_official24)

“>

இது நிஜமாகவே ரயில்வே துணியா அல்லது வெறும் டிசைன் ஒற்றுமையா என்பது தெரியவில்லை என்றாலும், இணைய உலகம் இந்தச் சம்பவத்தை ஒரு பொழுதுபோக்காகவே எடுத்துக்கொண்டுள்ளது.

ரயில்வேக்குத் தொடரும் தலைவலி:

இந்த நகைச்சுவைத் தாண்டி, ரயில்வே நிர்வாகத்திற்குத் திருட்டு என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெட் ரோல்கள் காணாமல் போவது ரயில்வேக்கு நிதி இழப்பை ஏற்படுத்துவதோடு, நிர்வாக ரீதியாகவும் பெரும் சிரமத்தைத் தருகிறது.

பயணிகள் தங்கள் பயணத்தின் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அடிக்கடி வேண்டுகோள் விடுத்து வந்தாலும், திருட்டுகள் குறையவில்லை.