தொடர் தோல்விகள் ஒருவரை மனதளவில் முடக்கிவிடக்கூடும். ஆனால், அதே தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், தனது அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றத்தைச் செய்ததன் மூலம், நாட்டின் மிகக் கடினமான யு.பி.எஸ்.சி தேர்வை வெற்றி கொண்டுள்ளார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேஹா ப்யாத்வால்.
24 வயதிலேயே ஐஏஎஸ் அதிகாரியாகி, பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அவரது வெற்றிப் பயணம் இதோ.
தோல்வியிலிருந்து பாடம்:
நேஹா தனது முதல் மூன்று முயற்சிகளில் தோல்வியைச் சந்தித்தார். ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், தனது கற்றல் முறையை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்தார். அப்போதுதான், தனது கவனத்தைச் சிதறடிக்கும் முக்கியக் காரணியாக இருப்பது ‘சமூக வலைதளங்கள்’ என்பதை அவர் உணர்ந்தார்.
துணிச்சலான முடிவு:
சமூக வலைதளங்களில் அவருக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருந்தனர். ஆனாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது லட்சியத்திற்கு முன்னால் இந்த ஆன்லைன் புகழ்ச்சி வெறும் மாயை என்பதை உணர்ந்தார்.
துணிச்சலான முடிவெடுத்த அவர், அடுத்த 3 ஆண்டுகள் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களையும் முடக்கினார். இந்தச் சிறிய இடைவெளிதான், அவரது படிப்பில் கவனத்தை அதிகரிக்கவும், விடைகளைத் தெளிவாக எழுதவும் பெரிதும் உதவியது.
நான்காவது முயற்சியில் வெற்றி:
தொடர் தோல்விகளால் சோர்வடையாமல், ஒவ்வொரு முறையும் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டார். இறுதியில், 2021-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி தேர்வில், அகில இந்திய அளவில் 569-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.
நேஹாவின் பின்னணி:
பிறப்பு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்தவர்.
படிப்பு: சத்தீஸ்கரின் ராய்ப்பூர் டி.பி. பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த நேஹா, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பிடித்தவர்.
ஊக்கம்: வருமான வரித்துறையில் பணியாற்றும் அவரது தந்தை சிரவன் குமார் தான், நேஹாவிற்கு யு.பி.எஸ்.சி கனவை விதைத்து, அந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்.
யு.பி.எஸ்.சி போன்ற தேர்வுகளில் வெற்றி பெற, படிப்பு மட்டும் போதாது; எத்தகைய ஈர்ப்புகளைத் தியாகம் செய்யத் துணிகிறோம் என்பதும், எவ்வளவு பொறுமையுடன் காத்திருக்கிறோம் என்பதுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பதற்கு நேஹாவின் கதையே சாட்சி.
