சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் அந்த வீடியோவில், அதிவேகமாக வாகனங்கள் இயங்கும் தேசிய நெடுஞ்சாலையில் காயமடைந்து நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய கன்றுக்குட்டிக்கு, அவ்வழியாக பைக் ஓட்டி வந்த நபர் ஒருவர் உடனடியாக இறங்கிச் சென்று உதவி செய்யும் நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ, காண்போரின் நெஞ்சை நெகிழ வைப்பதுடன் “மனிதநேயம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது” என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உரக்க உணர்த்தியுள்ளது. வீடியோவின் விவரங்களின்படி, ஆபத்தான நெடுஞ்சாலையில் காயங்களுடன் தவித்துக்கொண்டிருந்த அந்தக் கன்றுக்குட்டியைத் தூரத்திலிருந்து கவனித்த அந்த பைக் ஓட்டுநர், சிறிதும் தயங்காமல் தனது மோட்டார் சைக்கிளைச் சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

“>

தொடர்ந்து, அதிவேகத்தில் வரும் மற்ற வாகனங்களால் கன்றுக்குட்டிக்கு மேலும் அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, கவனமாகச் சென்று வேதனையால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அன்போடு அரவணைத்துத் தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளார். மேலும், அதற்குத் தேவையான உதவிகளையும் செய்து அதன் உயிரைக் காப்பாற்ற முன்வந்துள்ளார்.

தங்களின் அவசரப் பணிகளுக்காக மற்ற உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் கடந்து செல்லும் இந்த நவீன காலத்தில், வாயில்லாப் பிராணியான கன்றுக்குட்டியின் வலியை உணர்ந்து பைக் ஓட்டுநர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளவாசிகளின் மனதை வென்றுள்ளது.

அதோடு “உண்மையான மனிதநேயம் என்பது சக மனிதர்களிடம் மட்டுமன்றி, அனைத்து உயிர்களிடத்திலும் கருணை காட்டுவதே” என்று கூறி, அந்தப் பைக் ஓட்டுநரின் தயாள குணத்தையும் கருணை உள்ளத்தையும் இணையவாசிகள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.