ஜப்பானில் சுமார் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரிப் பகுதிகளில் வாழ்ந்த, ‘நீர் அரக்கன்’ என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட நீர்நில வாழ் உயிரினத்தின் புதைபடிவங்களை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அரிய கண்டுபிடிப்பு, ஆசியாவின் புதைபடிவ வரலாற்றில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பெரிய இடைவெளியை நிரப்பியுள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் ‘அஜிமு’ என்ற பகுதியில் உள்ள பண்டைய ஏரிப் படிவுகளான ‘சுபுசுகாவா’ அமைப்பில் கடந்த 1995 முதல் 1997-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது 3 அரிய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த எலும்புகள் எந்த உயிரினத்தைச் சேர்ந்தவை என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாததால், அவை ‘ஆன்ட்ரியாஸ்’ என்ற மாபெரும் சாலமண்டர் குடும்பத்தின் கீழ் தற்காலிகமாக வகைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்த எலும்புகளை மீண்டும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், அந்த உயிரினத்தின் முதுகெலும்பு அமைப்பானது இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து ராட்சச சாலமண்டர்களின் அமைப்பிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்தே, இது முற்றிலும் புதிய ஒரு வகை உயிரினம் என்பதை உறுதிசெய்த ஆராய்ச்சியாளர்கள், அதற்கு ‘லிம்னோஸ்போண்டிலஸ் அஜிமுயென்சிஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமார் 3.6 அடி (1.1 மீட்டர்) நீளம் வரை வளரக்கூடிய இந்த பிரம்மாண்ட உயிரினம், வேகமாக ஓடும் நதிகளுக்குப் பதிலாக அமைதியான ஏரிகள் மற்றும் சேறு நிறைந்த சதுப்பு நிலப் பகுதிகளிலேயே வாழ்ந்து வந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த 3 எலும்புகளின் மூலம் தற்போது வெளிவந்துள்ள இந்த உண்மை, புவியியல் மற்றும் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
