தன் பாஸின் உயிரைக் காப்பாற்ற சிறுநீரகம் தானம் செய்த பெண் ஊழியர் ஒருவர், அதன் பிறகு பணி இடத்தில் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வேலையிலிருந்தும் நீக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவில் 2011-ஆம் ஆண்டு நடந்த இந்த அதிர்ச்சி தரும் உண்மைச் சம்பவம், மனிதநேயத்திற்கும் சுயநலத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெபி ஸ்டீவன்ஸ் என்ற பெண், தனது மேலதிகாரியான ஜாக்கி புரூசியாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து உயிருக்குப் போராடுவதை அறிந்தார். உடனே, அவருக்குத் தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் டெபியின் சிறுநீரகம் அவரது பாஸின் உடலுக்கு நேரடியாகப் பொருந்தவில்லை. இதற்காக அவர் பின்வாங்கவில்லை; ‘பேர்ட் கிட்னி எக்ஸ்சேஞ்ச்’ என்ற மாற்றுத் திட்டத்தின் கீழ், வேறொரு நோயாளிக்குத் தனது சிறுநீரகத்தை தானம் செய்தார். இதன் மூலம் ஏற்பட்ட சங்கிலித் தொடர் தானம் காரணமாக, அவரது பாஸ் ஜாக்கி புரூசியாவிற்குப் பொருத்தமான மற்றொரு சிறுநீரகம் கிடைத்து, அவரது உயிரும் காப்பாற்றப்பட்டது.
உயிரைக் கொடுத்த தெய்வமாக டெபி கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் அவருக்குப் பெரும் சோதனையே தொடங்கியது. சிறுநீரகத் தானத்திற்குப் பிறகு டெபிக்கு கடுமையான உடல் வலி மற்றும் நரம்புச் கோளாறுகள் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், உயிர் பெற்ற அவரது பாஸ் ஜாக்கி, டெபியின் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அவர் விடுப்பு எடுத்ததற்காகக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி, பணி இடத்தில் மன ரீதியாகப் டார்ச்சர் செய்ய தொடங்கினார்.
இதயமே இல்லாதது போல நடந்துகொண்ட அந்த மேலதிகாரி, டெபிக்கு வேலை நேரத்தில் முறையான ஓய்வு இடைவேளைகள் தருவதைக் கூட தடுத்தார். அதுமட்டுமின்றி, அவரது வீட்டின் அருகில் இருந்த அலுவலகத்தில் இருந்து, சுமார் 50 மைல் தொலைவில் உள்ள ஒரு கிளைக்கு அவரைத் திட்டமிட்டு இடமாற்றம் செய்தார். இந்த அநீதிக்கு எதிராக டெபி நிறுவனத்தின் உயர் நிர்வாகத்திடமும், அரசு அமைப்புகளிடமும் புகார் அளித்தார். ஆனால், புகாருக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, டெபியை வேலையை விட்டே தூக்கியது அந்த நிறுவனம். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, பல ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2014-இல் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட ரகசிய உடன்படிக்கையின் மூலம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
