காதல் மற்றும் குடும்ப பாசத்திற்காக மனிதர்கள் எத்தகைய விபரீத முடிவுகளையும் எடுப்பார்கள் என்பதற்குச் சான்றாக, மெக்சிகோ நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒரு வியக்கத்தக்க மற்றும் பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. மெக்சிகோவில் உள்ள  மாநிலத்தில் உள்ள சான் மிகுஎல் டோடோலாபன் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ‘எல் டெக்கில்ரோ’ என்ற கொடூரமான கேங்ஸ்டர்  மற்றும் அவனது கூட்டாளிகள், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரண என்ஜினியரான இசையாஸ் வல்டேஸ் என்பவரைத் திடீரெனக் கடத்திச் சென்றனர்.

வழக்கம்போல கிராம மக்கள் அனைவரும் பயந்து நடுங்குவார்கள் என்று எதிர்பார்த்த அந்த ரவுடி கும்பல், அந்த என்ஜினியரின் மனைவியான யாதிரா கியூலர்மோ கார்சியா என்ற பெண்ணின் துணிச்சலைப் பற்றிச் சிறிதும் அறிந்திருக்கவில்லை.

காவல்துறையின் நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே களத்தில் இறங்கிய யாதிரா, கிராம மக்களை ஒன்றுதிரட்டி அந்தப் பகுதியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். அடியாட்களின் துப்பாக்கிகளுக்குப் பயப்படாமல், அந்தப் பயங்கரக் கிரிமினல் டானின் வயதான தாயாரான டோனா பெலிக்ஸ் மற்றும் அவனது சில கூட்டாளிகளை அதிரடியாகப் பிடித்துத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதிரடி காட்டினார்.

அதன்பிறகு ஊடகங்கள் வாயிலாக நேரடியாக அந்த டானுக்கு சவால் விட்ட அவர், “உன் தாயின் உயிர் உனக்கு முக்கியம் என்றால், என் கணவனை எந்தவித சேதமும் இல்லாமல் உடனடியாக என்னிடம் ஒப்படைத்துவிட்டு உன் அம்மாவை அழைத்துச் செல்” என்று பகிரங்கமாக எச்சரித்தார்.

எந்தவொரு காவல்துறைக்கும் சட்டத்திற்கும் அடங்காத அந்தப் பயங்கரக் கும்பல், தன் தாயின் உயிரைக் காப்பாற்ற வழியின்றிப் பெண்மணி யாதிராவின் நிபந்தனைக்கு முழுமையாகப் பணிந்தது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கிராமத்தில் பல நூறு காவல்துறை வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்தப் பெண் டானின் தாயை விடுவித்தார்.

அதற்குப் பதிலாகக் கடத்தப்பட்ட என்ஜினியரும் பத்திரமாக மீட்கப்பட்டு தனது மனைவியிடம் சேர்க்கப்பட்டார். இணையத்தில் மீண்டும் தீயாய் பரவி வரும் இந்தச் சம்பவத்தைப் பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள், மனைவியின் இந்த அசாத்தியமான துணிச்சலையும் மூளையையும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.