உத்தரப்பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம் வஜீர்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால் அவரது மனைதியோ, அன்றாடம் அவருக்குச் சாம்பார் சமைத்து மட்டுமே பரிமாறி வந்துள்ளார்.
இந்தச் சமையல் முறை பிடிக்காத கணவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே இதனால் அடிக்கடி சண்டைகள் வெடித்து வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவிலும் வழக்கம்போல சாம்பார் சமைக்கப்பட்டதால் தம்பதியிடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது நள்ளிரவு வரை நீடித்துள்ளது. மனைவியின் பேச்சைக் கேட்டு மனம் மாறாத கணவர், கோபத்தின் உச்சத்திற்குச் சென்று உடனடியாக அவசர உதவி எண்ணான 112-ஐ தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.
குடும்பத்தில் ஏதேனும் மிகப்பெரிய வன்முறையோ அல்லது ஆபத்தோ நேர்ந்துவிட்டதாகக் கருதி பதறிப்போன காவல்துறையினர், உடனடியாக அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குச் சென்று விசாரித்த பின்னர்தான், பொரித்த குழம்பிற்குப் பதிலாகத் தினமும் சாம்பார் வைப்பதால் ஏற்பட்ட சாதாரண சமையலறைச் சண்டைக்காகத்தான் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது என்ற உண்மையை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கணவன் தனது விருப்பத்தையும், மனைவி தன் தரப்பு நியாயத்தையும் மாறி மாறிச் சொல்லியதைக் கேட்ட போலீசார், ஒரு சிறிய சமையல் விஷயத்திற்காக நடுராத்திரியில் தங்களை இப்படி அலைக்கழித்துவிட்டார்களே என்று தலையில் அடித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒன்றாக அமர வைத்து அமைதியான முறையில் அறிவுரைகள் வழங்கி போலீசார் சமரசம் செய்து வைத்தனர். குழம்பு சமைத்த விதம் குறித்து அவசர எண்ணிற்கு அழைத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட இந்த விசித்திரமான மற்றும் அரிதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
