மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியிடையே புடவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஹரேராம் சிங் (35) என்பவருக்கும் அவரது மனைவி சுனிதா தேவி (30) என்பவருக்கும் இடையே சம்பவத்தன்று ஷாப்பிங் செல்வது தொடர்பாக வாக்குவாதம் வெடித்துள்ளது.
தன் மனைவிக்குச் சேலை வாங்கித் தருவதாக வாக்களித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் ஹரேராம் சிங் ஏமாற்றிவிட்டு வீட்டிற்குத் திரும்பியதால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சுனிதா தேவி கடும் சண்டையிட்டுள்ளார். இந்த வாதம் கைகலப்பாக மாறிய நிலையில், அருகில் இருந்த குக்கர் மூடியை எடுத்து கணவனின் தலையில் அந்தப் பெண் பலமாகத் தாக்கியுள்ளார்.
தலைில் பலத்த அடிபட்டு நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்த தனது கணவர் என்றும் பாராமல், சுனிதா தேவி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தனது கைகளாலேயே கழுத்தை இறுக்கித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துள்ளார். இந்த கோரச் சம்பவத்திற்குப் பிறகு, கணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டதாக அருகில் இருந்த உறவினர்களிடம் நாடகமாடி நம்பவைத்துள்ளார்.
ஆனால், உறவினர்களின் தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் இயற்கையான மரணம் அடையவில்லை மாறாகக் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து சுனிதா தேவியிடம் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், தன் கைவரிசையை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் உடனடியாக அவரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 29ஆம் தேதி வரை அவர் காவல் துறையின் காவலில் வைக்கப்பட்டு மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
