கோடைகாலக் கடுமையான வெப்பத்தின் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி, அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களும் அதிகளவில் சூடாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நீண்ட நேரம் கேமிங் விளையாடுவது, 4K வீடியோக்கள் பதிவுசெய்வது மற்றும் நேரடிச் சூரிய ஒளியில் செல்போனைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் ஸ்மார்ட்போன்களின் வெப்பநிலை மிக வேகமாக உயர்கிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, சிலர் தங்களது சூடான மொபைல்களை உடனடியாகக் குளிர்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஃபிரிட்ஜ் அல்லது ஃப்ரீசருக்குள் வைக்கும் ஆபத்தான தவறைச் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மொபைல் பழுதுபார்ப்பு தொழில்நுட்ப நிபுணர் ஜேமி ஃபார்னெல் (Jamie Farnell) இது குறித்து எச்சரிக்கையில், அதிக வெப்பத்தில் இருக்கும் ஒரு மின்னணு சாதனம் திடீரெனக் குளிரான சூழலுக்கு மாறும்போது ‘கன்டென்சேஷன்’ என்ற அறிவியல் நிகழ்வு காரணமாக அதன் உட்பகுதியில் மிகச் சிறிய நீர்த்துளிகள் உருவாகின்றன என்று தெரிவித்துள்ளார். இந்த ஈரப்பதம் மதர்போர்டு, சர்க்யூட் கனெக்டர்கள் மற்றும் பேட்டரி இணைப்புகளைப் பாதித்துச் சாதனத்தை நிரந்தரமாகச் சேதப்படுத்திவிடும்.
வெளிப்புறத்திற்குக் எவ்வித மாற்றமும் தெரியாவிட்டாலும், உள்புறத்தில் இருக்கும் முக்கிய மின்னணு பாகங்கள் முற்றிலும் செயலிழந்துவிடும் ஆபத்து உள்ளது. மொபைல் சூடானால் செய்ய வேண்டியவை: உடனடியாக மொபைல் பயன்பாட்டைக் நிறுத்திவிட்டு, பின்புலத்தில் இயங்கும் செயலிகளை மூட வேண்டும்.
போனின் பாதுகாப்புக் கவரை கழற்றிவிட்டு, நேரடி வெயில் படாத நிழலான அல்லது காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். சாதனம் இயல்பான வெப்பநிலைக்கு வரும் வரை தொடர்ந்து சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
காருக்குள் மொபைலை வைத்துச் செல்வது, தலையணையின் அடியில் வைத்துச் சார்ஜ் செய்வது மற்றும் தரமற்ற போலிக் கேபிள்களைப் பயன்படுத்துவது போன்றவை பேட்டரியின் ஆயுளைக் குறைப்பதோடு, பேட்டரி வீங்குதல் போன்ற தீவிரப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, ஸ்மார்ட்போன்கள் சூடாகும் போது செயற்கையான அதிர்ச்சியைக் கொடுக்காமல், இயற்கையாகக் குளிர விடுவதே சாதனத்தைப் பல ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
