இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. உடைகள், மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மளிகை மற்றும் மருந்துகள் வரை அனைத்தையும் விரல் நுனியில் ஆர்டர் செய்து வீட்டிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சௌகரியத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இணையவழி மோசடிக் கும்பல்களும் புதுப்புது உத்திகளில் மக்களின் வங்கிக் கணக்குகளைச் சூறையாடி வருகின்றன.
இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது எப்படி என்பது குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் பல்வேறு முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.சமூக வலைதளங்களில் வரும் கண்ணைப் பறிக்கும் விளம்பரங்கள் மற்றும் அதிகபட்ச தள்ளுபடி சலுகைகளை நம்பி பலர் தங்களது பணத்தை இழக்கின்றனர். மோசடி செய்பவர்கள் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயர்களிலேயே, சிறிய எழுத்துப்பிழைகளுடன் கூடிய போலி இணையதளங்களை உருவாக்கி ஏமாற்றுகின்றனர்.
எனவே, எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன், அந்த இணையதளத்தின் முகவரியை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு குறியீடு உள்ளதா என்பதையும், டொமைன் பெயர் சரியானதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.பொதுவாக, வங்கிக் கணக்கு விவரங்கள், OTP கார்டுகளின் பின்புறம் இருக்கும் CVV எண் அல்லது UPI PIN போன்ற ரகசியத் தகவல்களைத் திருடுவதன் மூலமே பெரும்பாலான நிதி மோசடிகள் நடைபெறுகின்றன. “உங்கள் ஆர்டர் ரத்து செய்யப்படவுள்ளது”, “பணத்தைத் திரும்பப் பெற OTP தேவைப்படுகிறது” என்று வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் யாராவது கேட்டால், அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
எந்தவொரு நம்பகமான ஆன்லைன் நிறுவனமும் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி வாயிலாக OTP அல்லது PIN எண்களைக் கேட்காது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.இன்றைய சூழலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலியான மதிப்பீடுகளும் 5-ஸ்டார் ரேட்டிங்குகளும் உருவாக்கப்படுகின்றன. எனவே, ஒரு பொருளை வாங்கும் முன், ஒரே மாதிரியான மொழியில் எழுதப்பட்ட மதிப்பீடுகளைக் கண்டு ஏமாறாமல், பிற சுயாதீனத் தளங்களில் அந்த நிறுவனத்தைப் பற்றிய கருத்துகளை ஆராய வேண்டும். இணையத்தில் நிறுவனத்தின் பெயருடன் “Reviews” அல்லது “Fraud” என்று தேடிப் பார்ப்பது உண்மைத்தன்மையை அறிய உதவும்.
நமது ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாக்க ‘இரட்டை அடையாள உறுதிப்படுத்தல்” வசதியை அனைத்து ஷாப்பிங் செயலிகளிலும் மின்னஞ்சல்களிலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், உங்களது கடவுச்சொல் திருடப்பட்டாலும், உங்களது அனுமதி இல்லாமல் யாரும் கணக்கிற்குள் நுழைய முடியாது.
மேலும், அனைத்துக் கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு கடினமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதும், அவசரப்பட்டுப் பணம் செலுத்தாமல் சில நிமிடங்கள் யோசித்து முடிவெடுப்பதும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து நம்மை முழுமையாகப் பாதுகாக்கும்.
