சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் கனவு. அந்த கனவை நம்பி, தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை முதலீடு செய்து, 17 ஆண்டுகள் காத்திருந்தும் வீடு கைக்கு வராததால் வேதனையின் விளிம்பிற்கே சென்ற 72 வயது முதியவருக்கு, மும்பை நுகர்வோர் நீதிமன்றம் தற்போது அதிரடியாக நீதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர், கடந்த 2009-ஆம் ஆண்டு செம்பூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் புதிய வீடு ஒன்ற முன்பதிவு செய்திருந்தார். வீட்டிற்கான முன்பணமும் செலுத்தி முடித்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டி முடித்து ஒப்படைப்பதாக அந்த கட்டுமான நிறுவனம் உறுதியளித்திருந்தது. ஆனால், ஆண்டுகள் பல உருண்டோடியதே தவிர, முதியவருக்கு வீடு மட்டும் கைக்கு வந்தபாடில்லை.

தான் கட்டிய பணமும் திரும்பக் கிடைக்காமல், வாக்குறுதி அளித்த வீடும் கைக்கு வராமல் 17 ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த முதியவர், இறுதியாக மத்திய மும்பை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். மனுவை தீர விசாரித்த நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்கத் தவறியது சேவைக் குறைபாடு என்றும், இதில் கட்டுமான நிறுவனத்தின் மீதுதான் தவறு உள்ளது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், முதியவரிடமிருந்து பெற்ற ₹10.45 லட்சத்தை ஆண்டிற்கு 8% வட்டியுடன் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு ஆணையிட்டது. மேலும், கடந்த 17 ஆண்டுகளாக முதியவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு ₹50,000 நஷ்டஈடாகவும், வழக்குச் செலவுக்காக ₹10,000 வழங்கிட வேண்டும் என்றும் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.