பூமியில் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மாபெரும் டைனோசர்கள் இனம் எவ்வாறு முற்றிலுமாக அழிந்துபோனது என்பது குறித்த மர்மத்திற்கு சர்வதேச விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி மூலம் தற்போது தெளிவான விடை கிடைத்துள்ளது.

நமது சூரியக் குடும்பத்திலேயே மிகவும் அரிதான மற்றும் விசித்திரமான வகையைச் சேர்ந்த ஒரு பிரம்மாண்ட விண்கல் தான் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போட்ட அந்தப் பேரழிவிற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் அடித்துக் கூறியுள்ளனர். சுமார் 10 கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த பிரம்மாண்டப் பாறை விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வந்து மோதிய விதம் குறித்து வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

சர்வதேச விஞ்ஞானிகள் நடத்திய விரிவான ஆய்வுகளில், மெக்சிகோவின் யூகட்டான் தீபகற்பப் பகுதியில் மோதிய அந்த விண்கல் ‘CO கார்பனேசியஸ் காண்ட்ரைட்’  எனப்படும் அரிய வகையைச் சேர்ந்தது என்பது உறுதியாகியுள்ளது. இந்த வகைப் பாறைகள் விண்வெளியில் மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடியவை என்பதால், அது பூமியை எப்படிக் தாக்கும் என்பது தொடர்பான புதிர்கள் தற்போது அவுந்துள்ளது.

இந்த மோதலின் காரணமாக பூமியில் வாழ்ந்த சுமார் 75 சதவீத உயிரினங்கள் ஒரே நொடியில் செத்து மடிந்ததுடன், உலகத்தின் மொத்த சுற்றுச்சூழல் சமநிலையும் முற்றிலுமாகச் சிதைந்துபோனது என்று அந்த ஆய்வறிக்கை விளக்குகிறது.

இந்த மோதல் நிகழ்ந்தபோது வளிமண்டலத்தில் பரவிய கோடிக்கணக்கான நுண்துகள்கள் பல ஆண்டுகளாகச் சூரிய வெளிச்சம் பூமியின் மீது படாமல் தடுத்துவிட்டன. இதனால் கடுமையான குளிர் காலம் உருவாகி, உலகளாவிய காலநிலை மாற்றம் ஏற்பட்டதே டைனோசர்கள் இனம் பூண்டோடு அழிய முக்கியக் காரணமாக அமைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த விபரீதத்தின் உண்மையான பின்னணி தற்போது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.