ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பணிப் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று நம்பும் பலருக்கு, ஒரு டெக் ஊழியரின் இந்த அனுபவம் ஒரு எச்சரிக்கை மணி.

டெல்லோய்ட்  போன்ற முன்னணி நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய டெக் ஊழியர் ஒருவர், பணிச்சுமை மற்றும் பதவி உயர்வு மறுக்கப்பட்ட விரக்தியில் வேலையை விட்டு வெளியேறியுள்ள சம்பவம், கார்ப்பரேட் பணி கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

பணியாளரின் சோகம் என்ன?

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த ஊழியர், ஆரம்பத்தில் நிறுவனத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “கடினமாக உழைத்தால் முன்னேறலாம்” என்ற பிம்பத்தை நம்பி, வாரத்திற்கு 74 மணிநேரம் வரை இடைவிடாது உழைத்துள்ளார்.

ஆனால், 10 ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்தது வெறும் 5% சம்பள உயர்வு மட்டுமே. இதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “நாராயண மூர்த்தி சொன்ன 70 மணிநேர உழைப்பைக் காட்டிலும் அதிகமாக உழைத்தும், சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வேலையை விட்டு வெளியேறத் தூண்டிய காரணங்கள்:

1. பணிச்சுமை: ஆறு பேர் செய்ய வேண்டிய வேலையை, நான்கு பேரை வைத்துக்கொண்டு, அதே காலக்கெடுவுக்குள் முடிக்கச் சொல்வது நிறுவனத்தில் வழக்கமாக இருந்துள்ளது.

2. பணியின் எல்லை இல்லாமை: வெறும் திட்டப் பணிகளுடன் நிற்காமல், புதிய வேலைவாய்ப்பு, பிரபோசல் தயாரித்தல், பயிற்சி அளித்தல் எனத் தேவையற்ற கூடுதல் வேலைகளின் சுமையும் ஊழியர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது.

3. தனிப்பட்ட வாழ்க்கையின்மை: விடுமுறை நாட்களிலும், சமூக நிகழ்வுகளிலும் வேலை சார்ந்த போன் கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம், மன அழுத்தத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

4. சம்பள பாகுபாடு: கடினமாக உழைக்கும் ஊழியருக்கும், பணி-வாழ்க்கை சமநிலையைப் பேணும் ஊழியருக்கும் சம்பள உயர்வு என்பதில் பெரிய வித்தியாசம் இல்லாதது பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றம் தேவையானது:

10 ஆண்டுகள் கழித்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறிய அவர், அங்குச் சிறந்த சம்பளத்துடன், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் சுதந்திரமும் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். “22 வயதில் வெற்றிக்கான இலக்கணமாக இருந்த ஒன்று, 35 வயதில் அதே முக்கியத்துவத்தைக் கொண்டிருக்காது” என்று கூறும் அவர், நிறுவனங்கள் ஊழியர்களை இயந்திரங்களாகப் பார்க்கக் கூடாது என்பதை உணர்த்தியுள்ளார்.

தனது 10 ஆண்டு கால அனுபவம் எதையும் தனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை என்று அவர் வருத்தப்படவில்லை; மாறாக, எந்த இடத்தில் நாம் நிறுத்த வேண்டும், எப்போது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த அனுபவம் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக அவர் கருதுகிறார்.