தில்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ சார்பாக நடைபெற்ற பிரம்மாண்டப் போராட்டத்தின் போது, கூட்டத்தைக் கலைப்பதற்காக டெல்லி போலீசார் ‘காலாவதியான’ கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் இணையத்தில் தற்போது மிக விவாதப் பொருளாக மாறியுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அசுடோஷ் ரான்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு ரீல்ஸ் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
அந்தப் படத்தில், போராட்டக் களத்தில் வெடித்துச் சிதறிய கண்ணீர்ப்புகைக் குண்டின் எஞ்சிய பகுதி தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள குறியீடுகளின்படி, அந்தக் குண்டு டிசம்பர் 2022-இல் தயாரிக்கப்பட்டதும், அதன் காலாவதித் தேதி டிசம்பர் 2025-ல் முடிவடைந்துவிட்டதும் அம்பலமாகியுள்ளது. இந்த ஆதாரத்தை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த அசுடோஷ் ரான்கா, “டெல்லி போலீசார் நேற்று காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினார்களா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Even the tear gas shells used by the Delhi Police were past their expiry date. 🤦🏾♂️ pic.twitter.com/K7FnWgdbBX
— Mohammed Zubair (@zoo_bear) July 20, 2026
இந்தப் பதிவு வெளியான ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் எதிர்வினைகளுடன் இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. பாதுகாப்பற்ற இத்தகைய உபகரணங்களைப் பயன்படுத்திய டெல்லி போலீசாரின் இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், “இளைஞர்களிடம் இங்கேயும் ஏமாற்று வேலை நடந்துள்ளது. இது அளவிட முடியாத ஆபத்தானது” என்று பிரதமரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “இது எங்களது அமைதியான போராட்டத்தைக் கலைக்கும் முயற்சி மட்டுமல்ல, மக்களைக் கொல்லும் முயற்சியாகும். டெல்லி போலீசுக்கு வெட்கக்கேடு” என்று கொதித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போதிலும், டெல்லி போலீசார் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
