திருமணம் என்றாலே விட்டுக்கொடுத்துப் போவதுதான் வழக்கம். ஆனால், உத்திரபிரதேசத்தில் ஒரு கணவர் தனது மனைவி செய்த குழம்பு/சமையல் சரியில்லை என்பதற்காக, நேரடியாகக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸை வரவழைத்த விசித்திரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸையே அதிரவைத்த புகார்:

உத்திரபிரதேச மாநிலம் வஜிர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் காஷ்யப் என்ற நபர், மது போதையில் 112 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காவல் துறையினர் பதறிப்போய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, அங்குப் புகாரளித்த அரவிந்த், “சார், என் மனைவி மாதுரி தினமும் நீர் போன்ற குழம்பு வைக்கிறாள்.

எனக்குச் சுண்டக்கறி அல்லது காய் பொரியல் தான் பிடிக்கும், ஆனால் அவள் என் பேச்சைக் கேட்கவே இல்லை” என்று தீவிரமான முகத்துடன் புகார் வாசித்துள்ளார். இதைக் கேட்ட போலீஸார் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

மது போதையில் அட்வைஸ்:

போலீஸார் அவரைச் சமாதானப்படுத்த முயன்றபோது, “ஏன் இவ்வளவு குடிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரவிந்த், “அரசாங்கம் தான் சாராயம் விற்கிறது, அப்புறம் ஏன் குடிக்கக் கூடாது? எல்லாரும் குடிக்கிறார்கள், நானும் குடிக்கிறேன்” என்று தத்துவமாகப் பேசி போலீஸாரையே வாயடைக்க வைத்துள்ளார்.

அரை நிர்வாண நிலையில், அவர் செய்த இந்த அலப்பறைகளைத் அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துப் பகிர, அது இப்போது இணையத்தில் நகைச்சுவைப் புயலைக் கிளப்பியுள்ளது.

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. “சாப்பாட்டுக்காகவா போலீஸைக் கூப்பிடுவது?” என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

“>

 

வஜிர்கஞ்ச் காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ புகாரையும் இதுவரை பதிவு செய்யவில்லை என்றாலும், இந்த ‘சமையல் போராட்ட’ வீடியோ நெட்டிசன்களுக்குச் சிறந்த பொழுதுபோக்காக மாறியுள்ளது.