அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதன்படி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் C. ஜெகன்ராஜ், மேல்புறம் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தானியேல் சிபின் ராஜேந்திரன், விளவன்கோடு தொகுதி மாணவர் காங்கிரஸ் செயலாளர் M.S. அபிஜித், காங்கிரஸ் பளுகல் பேரூராட்சி முன்னாள் செயலாளர் V. விஜின் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். மேலும், த.வெ.க-வைச் சேர்ந்த களியக்காவிளை பேரூராட்சி தலைவர் க. சரண், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை மாவட்ட துணைத் தலைவர் பிரேம் ஆனந்த், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் B. ஆன்றனி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
