பெங்களூருவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் மீனால் கோயல், சமீபத்தில் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று, பணத்தைப் பற்றிய நமது புரிதலைத் தலைகீழாக மாற்றியுள்ளது. ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது என்பது பலருக்கும் ஒரு கனவு இலக்காக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே ஒருவரைப் பணக்காரர் ஆக்கிவிடாது என்கிறார் அவர்.

 

பணக்காரர் என்பது சம்பளத்தில் இல்லை, சேமிப்பில் இருக்கிறது!

முன்னர் கே.பி.எம்.ஜி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்த மீனால், “நாம் 1 கோடி சம்பாதித்தால் போதும், பணக்காரர் ஆகிவிடலாம்” என்று நினைத்தாராம். ஆனால், அந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பதைப் பிற்கால அனுபவங்கள் அவருக்கு உணர்த்தின.

நிதி மேலாண்மை மற்றும் கட்டுப்பாடே ஒருவரை நீண்ட காலப் பணக்காரராக மாற்றும் என்று அவர் அடித்துக் கூறுகிறார்.

 

வருமானம் உயர உயர, நமது செலவுகளும் தானாகவே உயர்கிறது. உதாரணமாக:

மாதம் 20,000 ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருந்தவர், சம்பளம் உயர்ந்ததும் 70,000 ரூபாய் வீட்டுக்கு மாறுகிறார்.

பழைய இருசக்கர வாகனத்திற்குப் பதில் இ.எம்.ஐ (EMI) மூலம் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் வாங்குகிறார்.

வீட்டு உணவை விடுத்து, தினமும் சுவிகியில் ஆர்டர் செய்து உணவருந்துகிறார்.

சம்பளம் உயர உயர, அந்த உயர்வு நம் கைக்கு வரும் முன்பே செலவுகளாக மறைந்து விடுகிறது. இதுதான் ‘வாழ்க்கை முறை பணவீக்கம்’. இதனால் அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் பொறியாளர்களை விட, குறைந்த சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் அதிகச் சேமிப்பை வைத்திருப்பதை இன்றும் பார்க்க முடிகிறது.

நிதி சுதந்திரம் அடைவது எப்படி?

1 கோடி ரூபாய் சம்பாதிப்பது கடினமான காரியம் அல்ல. ஆண்டுக்கு 10% ஊதிய உயர்வு மற்றும் 12-15% முதலீட்டு லாபம் இருந்தால், 10 ஆண்டுகளில் ஒரு நடுத்தர வர்க்க ஊழியராலும் 1 கோடி ரூபாய் முதலீட்டுத் தொகையை உருவாக்க முடியும்.

இந்த 1 கோடி ரூபாயின் மூலம் கிடைக்கும் மாத வருமானம், ஒருவரது இ.எம்.ஐ செலவுகளில் 60-70% வரை ஈடுசெய்யும். இதுவே உண்மையான நிதி சுதந்திரம்.

முடிவுரை:

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு கோடி புதிய கோடீஸ்வரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், முக்கிய கேள்வி என்னவென்றால், கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா என்பது அல்ல; கோடீஸ்வரர் ஆன பிறகும், தங்களது ஆடம்பரச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, பணத்தைச் சேமிக்கும் ஒழுக்கத்தை உங்களால் கடைபிடிக்க முடியுமா என்பதுதான்!!