புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வாய் பேச முடியாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வரும் அந்தப் பெண், மாலையில் வேலை முடிந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த இருவர் அவரை ஊரில் விடுவதாகக் கூறி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியுள்ளனர்.
இதை தொடர்ந்து ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, அவரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
மேலும் சாலையோரம் மயக்கம் தெளிந்து அழுதுகொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கார் உரிமையாளரான சேகர் மற்றும் அவரது நண்பரான கூலித்தொழிலாளி மாரிமுத்து ஆகிய இருவரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் மாரிமுத்துவை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வரும் வேளையில், தலைமறைவாக உள்ள கார் ஓட்டுநர் சேகரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
