பிசிசிஐ தனது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்காக மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்  பரிந்துரைத்த புதிய விதிகளை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே ட்ராபி, சையத் முஷ்டாக் அலி ட்ராபி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து உள்நாட்டுப் போட்டிகளிலும் இந்தப் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

முதல் தர கிரிக்கெட்டில் நாளின் இறுதி ஓவர், தலைமைப் பயிற்சியாளரின் மைதான வருகை, விக்கெட் கீப்பரின் கையுறைகள், மற்றும் வைடு பந்துகள் தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் அந்த 7 முக்கிய புதிய விதிகள் இதோ:

  1. நாளின் கடைசி ஓவர் கட்டாயம்: முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நாளின் கடைசி ஓவர் வீசப்படும் போது விக்கெட் விழுந்தாலும், அன்றைய நாள் ஆட்டம் அதோடு முடியாது. புதிய பேட்டர் களமிறங்கி அந்த ஓவரின் மீதமுள்ள பந்துகளைக் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.

  2. பயிற்சியாளருக்கு அனுமதி: ஒருநாள் போட்டிகளில் (ODI) வழக்கமான ‘ட்ரிங்க்ஸ் பிரேக்’ நேரத்தின் போது, அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைதானத்திற்குள் சென்று வீரர்களுடன் பேச அனுமதி வழங்கப்படும்.

  3. ஃபீல்டிங் கேப்டனின் அதிகாரம்: பேட்டர் வேண்டுமென்றே குறைவான ரன்கள் ஓடினால்  அடுத்த பந்தை எந்த பேட்டர் சந்திக்க வேண்டும் என்பதை ஃபீல்டிங் செய்யும் அணியின் கேப்டனே தீர்மானிக்கலாம்.

  4. டெட் பால்  புதிய விதி: பந்து ‘டெட்’ எனக் கருதப்பட இனி அது பந்துவீச்சாளரிடமோ அல்லது விக்கெட் கீப்பரிடமோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. பந்து ஏதேனும் ஒரு ஃபீல்டரின் கையிலோ அல்லது தரையிலோ விழுந்து அசைவற்று இருந்தால் அது ‘டெட் பால்’ எனக் கருதப்படும்.

  5. லெக்-சைடு வைடு வழிகாட்டுதல்கள்: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘லெக்-சைடு வைடு’ பந்துகளைத் துல்லியமாகக் கணிப்பதற்காகத் தனியாகப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.

  6. ஃபீல்டர்களின் எல்லைக் கட்டுப்பாடு: பந்துவீச்சாளர் பந்தை வீசத் தொடங்கும் அந்த நொடியில், மைதானத்தில் உள்ள அனைத்து ஃபீல்டர்களும் எல்லைக்கோட்டிற்கு உள்ளேதான் நிற்க வேண்டும்.

  7. விக்கெட்கீப்பருக்கு அபராதம் இல்லை: பந்துவீச்சாளர் ஓடிவந்து பந்தை வீசும் இடைவெளியில், விக்கெட் கீப்பர் தனது கையுறைகளை முன்னோக்கி நகர்த்தினால், அதற்கு இனி அபராதம் விதிக்கப்பட மாட்டாது.