கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பான விசாரணையின் போது, காவல் உதவி ஆய்வாளர் ஜான்சன் என்பவர் முகேஷ் என்ற இளைஞரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் முகேஷை, அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷை மிரட்டியதோடு அவரிடம் பணமும் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த லஞ்ச விவகாரம் வெளியில் தெரியவரத் தொடங்கியதும், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தலைமை காவலர் நாகராஜன், அந்த இளைஞரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு லஞ்சமாகப் பெற்ற பணத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், அந்த இளைஞரோ பணத்தை வாங்க மறுத்து, இந்தப் பிரச்சனையில் இருந்து தம்மைக் காப்பாற்றினால் போதும் என்று கெஞ்சும் ஆடியோ, தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பணத்தை வாங்க மறுத்து அவர் புலம்பும் சத்தம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த ஆடியோவில், “அந்தப் பெண் தனக்குத் திருமணமாகவில்லை என்று கூறித்தான் என்னுடன் பழகினார், இனிமேல் நான் எந்தப் பிரச்சனைக்கும் வரமாட்டேன், காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்” என முகேஷ் கதறுகிறார்.

இருப்பினும், காவலர் விடாமல் பணத்தைத் திருப்பிப் பெற வற்புறுத்துவது காவல்துறை மீதான நம்பிக்கையைத் தளர்த்தியுள்ளது. இத்தகைய முறையற்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.