சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிறிய நற்செயல், பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் ஆற்றல் கொண்டது என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, இரக்க குணம் காட்டப் பெரிய பெரிய காரியங்கள் செய்யத் தேவையில்லை; பிறர் மீது காட்டும் ஒரு சிறிய அன்பும், பரிவும் போதுமானது என்பதை மீண்டும் மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர் சப்னா சிங் என்பவர் பகிர்ந்துள்ள அந்தப் பதிவில், அவர் தினமும் பணிக்குச் செல்லும் வழியில் பாலத்தின் அடியில் முதியவர் ஒருவர் எடை பார்க்கும் இயந்திரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்துள்ளார். எப்போதும் அலுவலகத்திற்கு நேரமாகிவிடும் என்பதால், அவரைக் கடந்து சென்ற சப்னா, அன்று சற்று நேரத்திற்கு முன்பே அங்குச் சென்றுள்ளார். அப்போதுதான் அந்த முதியவர் தனது எடை பார்க்கும் எடையந்திரத்தை அங்கு  தனியாகச் அமைத்துக் கொண்டிருந்தார்.

தனது எடையைச் சரிபார்த்த சப்னா, அந்த சேவைக்காக ₹5 கட்டணம் என்றிருந்த நிலையில், முதியவரிடம் ₹100 நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த முதியவரோ தனக்கு உரிய ₹5-ஐ மட்டும் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை அவரிடமே திருப்பித் தர முயன்றுள்ளார். தன்னுடைய உழைப்பிற்கு மீறிய ஒரு ரூபாயைக் கூட வாங்கத் தயங்கிய அந்த முதியவரின் நேர்மையும் எளிமையும் சப்னாவை வியப்பில் ஆழ்த்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Sapna Singh 🌙 (@dreamyydiaryy__)

அதை சிறு புன்னகையுடன் அவரிடமே வைத்துக்கொள்ளுமாறு கூறியபோது, அந்த முதியவரின் முகத்தில் தோன்றிய மெல்லிய புன்னகை அனைவரையும் நெகிழ வைத்தது.

இந்தச் சம்பவம் குறித்துப் பதிவிட்ட சப்னா, “என்னிடம் இருந்ததே அந்த ₹100 நோட்டு மட்டும்தான். ஒருவகையில் நான் அடுத்த 20 பேரின் எடையைக் காண்பதற்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டேன். கருணை என்பது கொடுக்கும் தொகையில் இல்லை, அதற்குப் பின்னால் இருக்கும் தூய்மையான எண்ணத்தில்தான் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இன்னும் மனிதநேயம் வாழ்கிறது”, “கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” எனப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.