வாழ்க்கை சில நேரங்களில் மனிதர்களுக்கு அளிக்கும் சோதனைகள், அவர்கள் தாங்கக்கூடிய வலிமைக்கும் அப்பாற்பட்டதாகி விடுகிறது. சோகங்கள் அலை அலையாக வந்து மோதும்போது, மனித மனம் தன் நம்பிக்கையை இழந்து, விதியின் பாதாளத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. அப்படியொரு நெஞ்சை உலுக்கும், கண்ணீரை வரவழைக்கும் சோகக் கதைதான் ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
56 வயதான மீசாலா சூர்யவதி மற்றும் அவளது 80 வயதான பார்வையற்ற தாய் வடபள்ளி புர்ரம்மா ஆகிய இருவரின் கதையும், கேட்போரின் நெஞ்சைக் கறைய வைக்கும் ஒரு சோகக் காவியம்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை… “நாங்கள் தேவாலயத்திற்கு (Church) சென்று வருகிறோம்” என்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, அந்தத் தாயும் மகளும் வீட்டிலிருந்து மெதுவாக நடைபோட்டனர். ஆனால், அவர்கள் சென்றது பிரார்த்தனைக்காக மட்டுமல்ல… தங்கள் வாழ்வின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக என்பதை அந்த நேரம் யாரும் அறிந்திருக்கவில்லை.
கிராமத்திற்கு அருகே ஓடும் முக்தேஸ்வரம் முக்கியக் கால்வாய்… அந்தப் பாலத்தின் மீது ஒரு பைபிள் புத்தகமும், சில தனிப்பட்ட பொருட்களும் அனாதையாகக் கிடந்தன.
தேவாலயத்திற்குச் சென்றவர்கள் திரும்பி வராததால் தேடி வந்த உறவினர்கள், பாலத்தின் மீது கிடந்த அந்தப் பைபிளைக் கண்டதும் உறைந்து போயினர். தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துயரத்திலும் இறைவனின் வார்த்தைகளைத் தேடிய அந்தப் பிஞ்சுக் கரங்கள், இறுதியில் அதே பைபிளைப் பாலத்தில் வைத்துவிட்டு ஆழமான கால்வாய்க்குள் குதித்துவிட்டன என்ற கசப்பான உண்மை உறைத்தது.
தகவல் அறிந்து ஓடிவந்த மீட்புக் குழுவினர், தீவிரத் தேடுதலுக்குப் பின் மகள் சூர்யவதியின் உடலைக் மீட்டு எடுத்தனர். 80 வயதான அந்தப் பார்வையற்ற தாயின் உடலைத் தேடும் பணி இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த விபரீத முடிவுக்குப் பின்னால் இருக்கும் மகளின் மனப்போராட்டம், விவரிக்க முடியாத அளவு கொடூரமானது.
சூர்யவதியின் வாழ்க்கை சோதனைகளால் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே கணவனைப் பறிகொடுத்து அனாதையானவள் அவள். அதன்பின்னர், வயதான தாய் புர்ரம்மா அவளுடனேயே வாழத் தொடங்கினாள். வயது மூப்பால் பார்வை மங்கி, நோய்களின் பிடியில் தாய் சுருண்டிருக்க… சூர்யவதிக்கோ பேரிடியாக அவளது மூத்த மகன் ஒரு கொடூரமான சாலை விபத்தில் உயிரிழந்தான்.
இளைய மகனும் மகளும் திருமணமாகித் தனித்தனியே வாழ்ந்து வந்தாலும், நீண்டகாலமாகப் படுக்கையாளியாக இருந்த சூர்யவதிக்கு ஒரே ஒரு பயம் மட்டுமே இதயத்தை அரித்துக் கொண்டே இருந்தது:
“நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன்… நாளை எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், கண் தெரியாத என் வயதான தாயை யார் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்? அவளை அனாதையாக விட்டுவிட்டு நான் எப்படி இறப்பேன்?”
இந்த ஒரே ஒரு எண்ணம், அவளது இரவுகளின் தூக்கத்தைத் தொலைத்தது. தன் தாயை விட்டுவிட்டுத் தான் மட்டும் வாழவோ அல்லது சாகவோ முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்த மகள், இறுதியில் தாயையும் அழைத்துக் கொண்டு இந்த உலகத்தை விட்டே செல்லத் துணிந்தாள்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் அன்பையும், அதனுள் ஒளிந்திருக்கும் பயங்கரமான தனிமையையும் நினைத்து என் பேனா கண்ணீர் வடிக்கிறது.
அது ஒரு மகளின் சுயநலமற்ற, அதேசமயம் விதியின் முன் தோற்றுப்போன ஒரு பயத்தின் வெளிப்பாடு. தான் இறந்த பிறகு தன் தாய் படப்போகும் நரகத்தை நினைத்துப் பயந்து, தாயின் கையோடு தன் கையையும் பிணைத்துக் கொண்டு ஆழமான நீரில் குதித்த அந்த நொடி… மனித சமுதாயம் தோற்றுப்போன ஒரு கரிய மிச்சம்.
காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வரலாம், சூர்யவதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அந்தப் பாலத்தின் மீது அனாதையாகக் கிடந்த அந்த பைபிள், “மனிதர்களின் கவலைகளுக்கு இந்தச் சமூகம் எப்போது உண்மையான ஆதரவாக மாறப்போகிறது?” என்ற கேள்வியை ஓசையின்றி கேட்டுக்கொண்டே இருக்கிறது!
