இன்றைய சமூகத்தில் ‘ஒயிட் காலர்’ (White Collar) எனப்படும் கார்ப்பரேட் வேலைகளும், ஏசி அறைகளில் அமர்ந்து பார்க்கும் மேற்பார்வையாளர் (Supervisor) பணிகளும்தான் சமுதாயத்தில் ஆகச்சிறந்த கௌரவமாகக் கருதப்படுகின்றன. ஆனால், அந்தப் போலி கௌரவத்தின் முகத்திரையைக் கிழித்து, “வியர்வை சிந்தும் எந்த உழைப்பும் தாழ்ந்ததல்ல; அதுவே என் சுதந்திரம்!” என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஒரு சாமானிய ஆட்டோ ஓட்டுநர்.

ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) ஆகாஷ் குப்தா, வழக்கம்போலத் தன் அன்றாடப் பயணத்திற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆனால், அந்த 20 நிமிடப் பயணம், இந்தியாவின் தற்காலிகப் பணியாளர்களின் ‘கிக் எகானமி’ (Gig Economy) குறித்த அவரது பார்வையையே தலைகீழாக மாற்றிப்போடும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

பயணத்தின் நடுவே, அந்த ஆட்டோ ஓட்டுநரின் அன்றாட வாழ்க்கை முறையைப் பற்றியும், அவரது தினசரி வருமானம் பற்றியும் இயல்பாகப் பேசத் தொடங்கினார் ஆகாஷ். அப்போது அந்த ஓட்டுநர் கூறிய தகவல்கள், ஒரு நிறுவனத்தின் CEO-வையே தூக்கி வாரிப்போட வைத்தன!

ஒரு நாளைக்குச் சவாரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ₹500 முதல் ₹2,000 வரை சம்பாதிப்பதாகவும், அனைத்துச் செலவுகளும் போக மாதத்திற்குச் சராசரியாக ₹50,000 முதல் ₹60,000 வரை தன் கைக்குக் நிகர லாபமாகக் கிடைப்பதாகவும் அந்த ஓட்டுநர் புன்னகையோடு கூறினார்.

ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற ஆகாஷ், “நீங்கள் சிறுவயதிலிருந்தே ஆட்டோதான் ஓட்டுகிறீர்களா?” என்று வினவினார். அதற்கு அந்த ஓட்டுநர் அளித்த பதில் இன்னும் சுவாரசியமானது:

“இல்லை ஐயா… நான் இதற்கு முன்பு குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ‘மேற்பார்வையாளராக’ (Supervisor) வேலை பார்த்தேன். ஆனால், மாதம் முழுவதும் இரவும் பகலும் ரத்தம் சிந்தி உழைத்தும் எனக்குக் கிடைத்த சம்பளம் வெறும் ₹25,000 மட்டும்தான். அந்தப் போலி கௌரவத்தை விட, இந்த ஆட்டோ கைப்பிடி எனக்கு அதிக சுதந்திரத்தையும், குடும்பத்தைக் காப்பாற்றும் அளவுக்குப் போதுமான வருமானத்தையும் தருகிறது!”

ஒரு நாளைக்கு வெறும் 8 மணி நேரம் மட்டுமே ஆட்டோ ஓட்டும் அந்த நபர், தன் குடும்பத்தின் அனைத்து அத்தியாவசியச் செலவுகளையும் முடித்த பிறகு, தன் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையைச் சேமிக்கவும் செய்கிறார்.

தனக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைக்காமல் போனாலும், தன் மூன்று குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் அவர் காட்டும் அசாத்திய அக்கறை எந்த ஒரு பெரு நிறுவனத்தின் அதிகாரியையும் விட மேலானது. “தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது, அவர்கள் படித்துச் சிகரம் தொட வேண்டும்” என்ற அந்த ஏழைத் தந்தையின் லட்சியக் குரல், CEO ஆகாஷின் நெஞ்சைத் தொட்டது.

இந்த நெகிழ்ச்சியான உரையாடலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஆகாஷ் குப்தா, “இந்தியாவில் வேலையின் தன்மையும், கிக் எகானமி அமைப்பும் எவ்வளவு வேகமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த ஆட்டோ சகோதரரே ஆகச்சிறந்த உதாரணம்” என்று நெகிழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

மாதக்கடைசியில் கடனில் மூழ்கி, கார்ப்பரேட் அழுத்தங்களில் தன் நிம்மதியைத் தொலைக்கும் பல மாதச் சம்பளக்காரர்களை விட, இந்த ஆட்டோ ஓட்டுநரின் நிதி நிலைமையும், மன நிம்மதியும் ஆயிரம் மடங்கு மேலானது.

“வேலை சிறியதோ பெரியதோ… உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும், குடும்பத்தைக் காக்கும் நிம்மதியும், சுயமரியாதையும்தான் ஒரு மனிதனின் உண்மையான அடையாளம்!” என்பதை இந்த ஆட்டோ ஓட்டுநர் இணைய உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் இந்தக் காணொளி, உழைக்கும் ஒவ்வொரு கரத்தின் உன்னதத்தையும் நமக்கு மீண்டுமொருமுறை நினைவூட்டுகிறது!

 

View this post on Instagram

 

A post shared by Akash Gupta | KaashSeAkash (@kaashseakash)

“>