ஈரோடு அருகே உள்ள சோலார் நகரைச் சேர்ந்தவர் சேட்டு தனபால், இவர் தனது மனைவி புஷ்பாவுடன் இணைந்து தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தனது தந்தை ஆறுமுகத்திற்கும், மனைவி புஷ்பாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சேட்டு தனபால் நீண்ட நாட்களாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்தச் சந்தேகத்தின் காரணமாகவே, அடிக்கடி தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
கடந்த 14-ம் தேதி இரவு வழக்கம்போல இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு மணியளவில் புஷ்பா கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது, தூக்கத்திலிருந்து எழுந்த சேட்டு தனபால், “நீ உயிரோடு இருந்தால்தானே இப்படிச் செய்கிறாய்” என்று ஆவேசத்துடன் கத்தியுள்ளார்.
உடனே வீட்டில் இருந்த இரும்பு கடப்பாரையை எடுத்து, புஷ்பாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் தன் மனைவியைத் தாக்கியதாகச் சேட்டு தனபாலை மொடக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த புஷ்பா, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, சேட்டு தனபால் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தாக்குதல் வழக்கை, கொலை வழக்காக மாற்றி காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
