மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் கல்லூரி மாணவி ஒருவர் தொடர்ந்து ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் புனே காவல்துறை நான்கு பேரைக் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட 21 வயது மாணவி, புனேயில் உள்ள பிரபலக் கல்லூரியில் B.A முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் வாயிலாக நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் நட்பாக மாறிய நிலையில், அந்த நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் நட்பைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அந்த நான்கு பேரும் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த அருவருப்பான சம்பவங்களை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்த மாணவி கடந்த ஓராண்டாக இந்தச் கொடுமைகளை அமைதியாகச் சகித்துக் கொண்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஆபாச வீடியோ மிரட்டலையும் அத்துமீறல்களையும் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் தைரியமாகப் புகாரளித்தார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு குற்றவாளி நான்கு பேரையும் கைது செய்தனர். சமூக வலைத்தள நட்பால் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
