இந்தியர்களின் பொது ஒழுக்கம் மற்றும் பொறுப்பற்றத்தனம் குறித்து இணையத்தில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் வேளையில், மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. லோனாவாலா பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மேம்பாலத்தின் மீது காரை நிறுத்திய நடுத்தர வயது நபர் ஒருவர், காருக்குள் இருந்து காலி மது பாட்டிலை எடுத்து, கீழே ரோடு இருக்கிறதே என்ற துளிரும் பயமில்லாமல் அசால்ட்டாக தூக்கி வீசிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கீழே வாகனங்களோ அல்லது மனிதர்களோ செல்கிறார்களா என்று ஒருமுறை கூட பார்க்காமல், அந்த நபர் கண்ணாடி பாட்டிலை பாலத்தின் அடியில் வீசுகிறார். அடுத்த சில நொடிகளில், பாலத்தின் கீழே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரின் கூரையின் மீது அந்த கண்ணாடி பாட்டில் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலத்தின் ஓரமாக அமர்ந்திருந்த ஒருவர், “நீங்கள் வீசிய பாட்டில் கீழே சென்ற கார் மீது விழுந்துவிட்டது” என்று கூறியதும், அந்த நபர் சிறிதும் குற்ற உணர்ச்சியில்லாமல், “கீழே ரோடு காலியாக இருக்கும் என்று நினைத்தேன்; அதான் வீசினேன்” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். பின்னர், தான் வீசிய பாட்டில் எங்கே விழுந்தது என்பதைப் பார்ப்பதற்காக பாலத்தின் அடியில் எட்டிப் பார்க்கும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
“இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தயவுசெய்து இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்” என்ற குறிப்புடன் இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக கார் மீது விழுந்ததால் தப்பியதாகவும், அதுவே அந்த நேரத்தில் வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீதோ அல்லது பாதசாரிகளின் தலையிலோ விழுந்திருந்தால் விளைவுகள் மிகக் கொடூரமாக இருந்திருக்கும் என நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், “மிகவும் பொறுப்பற்ற செயல். ஒரு பைக்கர் தவறான நேரத்தில் வந்திருந்தால் இது மிகப்பெரிய விபத்தாக முடிந்திருக்கும். சாலைகள் தங்களின் சொந்த குப்பைத்தொட்டி அல்ல என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்களா? இல்லையெனில், மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் வகையில் இவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். வயது வித்தியாசமின்றி இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபடுபவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்து வருகிறது.
