ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள் வேறு எங்கிருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் இடம்பெற்ற வாசகங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டிய தரூர், பாகிஸ்தான் வெறும் முகமூடியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே சமயம், இந்தப் போர் நிறுத்த முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என்றும் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் போர் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்தியா வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

பிராந்தியப் பொறுப்புள்ள நாடாக இந்தியா முன்வந்து, உலகளாவிய அமைதி மற்றும் புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதில் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், மத்தியஸ்தம் பாகிஸ்தான் வழியாக நடந்தாலும் இந்தியா தன் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.