ஆந்திர மாநிலம பிரபாடு கிராமத்தில் இயங்கி வரும் பழங்குடியினர் நலத்துறை அரசுப் பள்ளியில், மாணவர்களின் கல்வி வளர்ச்சி குறித்த பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்துப் பேசுவதற்காகக் காலை முதலே பெற்றோர்களும் ஊர்ப் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளி வளாகத்தில் திரண்டு காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணா, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நேராக நடக்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி வந்துள்ளார். பெற்றோர் கூட்டத்திற்குள் நுழைந்த அவர், அங்கிருந்தவர்கள் கண்முன்னே வகுப்பறை பெஞ்ச் மீது சுருண்டு விழுந்து படுத்துக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், “இப்படிப்பட்டவர்கள் பாடம் நடத்தினால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் என்னாவது?” என்று பள்ளி நிர்வாகத்திடம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

 

 

View this post on Instagram

 

A post shared by mid-day (@middayindia)

தலைமை ஆசிரியர் போதையில் மயங்கிக் கிடந்ததால், வேறு வழியின்றி ராமு என்ற மற்றொரு ஆசிரியர் கூட்டத்தை நடத்தி முடித்தார். இதனிடையே, ஆசிரியர் போதையில் பெஞ்ச்சில் சுருண்டு கிடக்கும் காட்சிகளைச் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது இணையத்தில் தீயாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்டக் கல்வி அதிகாரி, உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இதுபோன்ற பொறுப்பற்ற ஆசிரியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (செய்யப்படுவார் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் உறுதி படத் தெரிவித்துள்ளன.