சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கல்லூரி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளையை  போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ராஜமன்னார் காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பிரதீப் (20), கூலித் தொழிலாளி. இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், அந்தச் சிறுமி தற்போது கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் மாணவியை ஈரோட்டுக்கு வரவழைத்த பிரதீப், அங்குள்ள வ.உ.சி. பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மாணவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், மாணவியுடனான தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு, அவரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மாணவி, காதலனைச் சந்திப்பதற்காக அண்மையில் நேராகப் பிரதீப்பின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பிரதீப்பிற்கு கடந்த மாதமே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அம்மாணவி, உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீப்பை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.