உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கு பகுதியில், மருத்துவப் படிப்பிற்காகத் தயாராகி வந்த 19 வயது நீட் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.

அதோடு தன் நண்பருடன் சுற்றுலாத் தலத்திற்குச் சென்று சமூக வலைதளங்களுக்காக வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மூன்று கொடூர நபர்கள், தங்களை வனத்துறை அதிகாரிகள் எனப் பொய் கூறி மிரட்டியுள்ளனர்.

பின்னர் மாணவியின் நண்பனைத் தாக்கி, துணியால் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணை அடர்ந்த புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று மனிதநேயமற்ற முறையில் கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தின் போது, “என்னை தயவுசெய்து விட்டுடுங்க, உங்க கால்ல வேணும்னா விழுறேன்” என அந்தப் பெண் கதறி அழுதும், சிறிதும் இரக்கமின்றி குற்றவாளிகள் தங்களின் வெறிச்செயலைத் தொடர்ந்துள்ளனர். மேலும், அந்த அதிர்ச்சி கரமான தருணங்களைத் தங்களது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து, காவல்துறையிடம் சென்றால் இதை இணையத்தில் பதிவேற்றி விடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

குற்றவாளிகள் தப்பிச் சென்ற பிறகு, சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர், காட்டுப் பகுதியில் போதிய தொலைபேசி சேவை இல்லாத நிலையிலும் மலையிலிருந்து கீழே ஓடி வந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தரப்பிரதேச காவல்துறையினர் மாணவியையும் அவரது நண்பரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க முயன்ற போது, குற்றவாளிகளில் ஒருவனான ஜிதேந்திர பட்டேல் என்பவர் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க முயன்றுள்ளான்.

இதில் காவலர் ஒருவர் காயமடைந்த போதிலும், காவல்துறையினர் நடத்திய பதில் என்கவுன்டர் துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியின் காலில் தோட்டா பாய்ந்து தீவிரமாகக் காயமடைந்த நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டான். தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகள் மீது தலா ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டுத் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.

“>