இந்தியக் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரையான் டென் டோஷேட், தனது இந்திய அணிப் பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனக்குப் புகழ்பெற்ற ‘நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ்’ குடும்பத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள நைட் ரைடர்ஸ் குழுமத்தின் அனைத்துப் போட்டிகளுக்குமான ‘கிரிக்கெட் உத்திகளுக்கான தலைமைப் பொறுப்பை’ அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது.

இந்த புதிய பொறுப்பின் மூலம், உலகம் முழுவதும் பரவியுள்ள நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான புதிய வீரர்களைக் கண்டறிதல், வீரர்களை ஏலத்தில் எடுத்தல், அணிக்கான திட்டமிடல் மற்றும் திறமைகளை மேம்படுத்துதல் போன்ற அனைத்து முக்கிய உத்திகளையும் அவரே முன்னின்று வழிநடத்துவார்.

ரையான் டென் டோஷேட் நைட் ரைடர்ஸ் குடும்பத்திற்கு புதியவர் அல்ல. கடந்த 2011-ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய அவர், 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கேகேஆர் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய போது அந்த அணியின் மிக முக்கியமான வெற்றி வீரராகத் திகழ்ந்தார்.

பின்னர் 2022-இல் பயிற்சியாளர் குழுவில் இணைந்து, கடந்த 2024 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி மூன்றாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்ற போதும் தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்திய தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராகக் கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றிய அவர், தற்போது மீண்டும் நைட் ரைடர்ஸ் குடும்பத்திற்கே திரும்பியுள்ளார்.

இந்தப் புதிய நியமனம் குறித்துப் பேசிய நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் மைசூர், ரையான் டென் டோஷேட்டின் அனுபவமும், நைட் ரைடர்ஸ் அணியின் சிந்தனையைப் புரிந்து வைத்திருக்கும் திறனும் இந்த உலகளாவிய பொறுப்புக்கு அவரை மிகச் சரியான நபராக மாற்றுகிறது என்று பாராட்டியுள்ளார்.

அதேவேளையில், சிபிஎல் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், ஐஎல்டி20 தொடரில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட்டில் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கும் உதவிப் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய சாம்பியன் மீண்டும் பெரிய பொறுப்புடன் திரும்பியிருப்பது நைட் ரைடர்ஸ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.