உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், 19 வயது பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவரைப் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கன்கர்கேரா பகுதியில் உள்ள டிஃபென்ஸ் என்க்லேவ் பூங்கா அருகே பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீரட் சிவ்லோக் புரி பகுதியைச் சேர்ந்த ஆதித்ய பிரதாப் (22) என்ற இளைஞர் மீது கொலை முயற்சி, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் காவல் நிலையப் பட்டியலில் உள்ள பிரபல ரவுடி (History-sheeter) ஆவார். கடந்த ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்த ஆதித்ய பிரதாப், 12-ஆம் வகுப்பு படிக்கும் 19 வயது மாணவி ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறையிலிருந்து வந்த பிறகு மாணவியுடன் பேச முயன்ற நிலையில், அம்மாணவி பேச மறுத்ததால் ஆதித்ய பிரதாப் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று இருவரையும் டிஃபென்ஸ் என்க்லேவ் பூங்கா அருகே நேரில் சந்தித்துப் பேசுமாறு ஆதித்ய பிரதாப் வரவழைத்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே சுமார் 10 நிமிடங்கள் காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. குறிப்பாக, மாணவியின் உடலில் இருந்த ‘டாட்டூ’ (பச்சை குத்தல்) விவகாரம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டு இந்தத் தகராறு வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குவாதம் முற்றியதில், ஆதித்ய பிரதாப் தான் வைத்திருந்த சட்டவிரோதத் துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இதில் மாணவியின் தலையிலும் வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக ஆதித்ய பிரதாப் அதே துப்பாக்கியால் தனது மார்பில் இருமுறை சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், உயிருக்குப் போராடிய மாணவியை மீட்டு உடனடியாகச் சுபாரதி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
