உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவடி யாத்திரையில் வழக்கத்திற்கு மாறான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மத எல்லைகளைக் கடந்து, பாரம்பரிய முஸ்லிம் தொப்பியை அணிந்துகொண்டு, நாவில் “பம்பம் போலே” என்ற சிவ கோஷ முழக்கத்துடன், 201 லிட்டர் கங்கை நீரை ஏந்திச் செல்லும் ‘சாக்கிர்’ என்ற முஸ்லிம் இளைஞரின் பக்திப் பயணம் அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹரித்வாரில் உள்ள புனித கங்கை நதியிலிருந்து 201 லிட்டர் கங்கை நீரைக் காவடியில் எடுத்துக்கொண்டு, தனது நண்பர்களான மின்டு மற்றும் கௌரவ் ஆகியோருடன் இணைந்து சாக்கிர் பாதயாத்திரையாகப் புறப்பட்டுள்ளார். முசாபர்நகர் வழியே செல்லும் இவர்களின் காவடிப் பயணத்தைக் காணும் பொதுமக்கள், சாக்கீரின் பக்தியையும் மதநல்லிணக்கத்தையும் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
சிவபெருமான் மீது தனக்கு இருக்கும் அளப்பரிய பக்தியையும், மதநல்லிணக்கத்தைப் பரப்பும் நோக்கத்தையுமே இந்த யாத்திரை வெளிப்படுத்துவதாகச் சாக்கிர் கூறுகிறார். “கடவுள் மற்றும் பக்திக்கு மதம் ஒரு தடையல்ல; சிவன் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர்” என்ற நம்பிக்கையுடன் அவர் இந்த நெடும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்து – முஸ்லிம் சமூகத்தினரிடையே சகோதரத்துவத்தையும் அமைதியையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், சமூக வலைதளங்களிலும் அப்பகுதியிலும் நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாக்கீர் மற்றும் அவரது நண்பர்களின் இந்த ஆன்மீகப் பயணத்திற்குச் செல்லும் வழியெங்கும் மக்கள் சிறப்பான வரவேற்பளித்து வழியனுப்பி வைக்கின்றனர்.
