உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு பகுதியில், மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாகப் பள்ளிவாசல் ஊழியர் (முஅத்தின்) ஒருவர் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு வீதியில் அலறியபடி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் உள்ள ஹுசைனி பள்ளிவாசலில் முஅத்தினாகப் பணியாற்றி வரும் நபர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ஜூலை 30 அன்று, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏதோ ஒரு குடும்ப விஷயம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே எல்லை மீறிச் சென்றுள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். நொடிப் பொழுதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியதும், வலியால் தாங்க முடியாமல் கதறியபடி வீதியில் ஓடிவந்துள்ளார். உடலில் தீப்பற்றி எரிந்தவாறு அலறியபடி ஓடிவந்த பேர பேரதிர்ச்சியைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்துபோயினர்.
உடனடியாகச் செயல்பட்ட அக்கம் பக்கத்தினர், போர்வைகளைப் போர்த்தித் தீயை அணைத்து, அவரை ஆபத்தான நிலையில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குடும்பத் தகராறுக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
