கார் ஓட்டிச் செல்லும்போது திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவரை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கூறி மும்பை காவல்துறையினர் சுமார் 5 மணி நேரம் காவல்நிலையத்தில் அமரவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காததால், அந்த முதியவரின் உடலின் வலது பகுதி தற்போது முற்றிலும் பக்கவாதத்தால் முடங்கியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
மும்பையின் ஒரு பகுதியில் தனியாக வசித்து வரும் ஓய்வுபெற்ற தொழிலதிபர் சரத் கதம் (73) என்பவரின் மனைவி மற்றும் மகன் கனடாவில் வசிக்கின்றனர். ஜூலை 25 அன்று காலை 9 மணியளவில் அவர் கார் ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவருக்கு கடுமையான பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவரது கார், முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பக்கவாதத்தின் தீவிரத்தால் முதியவர் சரத் கதமால் சரியாகப் பேச முடியாமல் நாக்கு குழறியுள்ளது. ஆனால், விபத்து இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடல்நிலையைக் கண்டுகொள்ளாமல், அவர் மதுபோதையில் இருப்பதாக தவறாகக் கணித்து வெர்சோவா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவசர மருத்துவ உதவி எதையும் வழங்காமல், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரை காவல் நிலையத்திலேயே அமர வைத்துள்ளனர்.
இதனிடையே, வழக்கறிஞரான அவரது உறவினர் காவல் நிலையம் சென்று பார்த்தபோது, சரத் கதம் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பேச்சு குழறுவது பக்கவாதத்தின் அறிகுறி என்று அவர் சுட்டிக்காட்டிய போதிலும், காவல்துறையினர் அதைப் பொருட்படுத்தாமல் மதுபோதை என்றே வாதிட்டுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் முதியவரின் வலது பக்கம் செயலிழந்துபோனது. இச்சம்பவத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அமித் சதம் காவல்துறை உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
