உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவுக்கு இரவு உணவு கொடுத்துவிட்டுத் திரும்பிய 10 வயது சிறுமியை, அவசர உதவி ரோந்துப் பிரிவைச் சேர்ந்த காவலர் ஒருவர் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட காவலர் அபிஷேக் யாதவ் என்பவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மண்டல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்காவுக்கு இரவு உணவு கொடுத்துவிட்டு, ஜூலை 28 ஆம் தேதி இரவு தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த அச்சிறுமியை, ரோந்துப் பணியில் இருந்த காவலர் அபிஷேக் யாதவ் தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சிறுமி வாகனத்தில் ஏற மறுத்தபோதிலும், வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாகக் கூறி வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரம் புரிந்து, சிறுமியைப் படுகொலை செய்து ராப்தி நதிக்கரையில் உடலை வீசி எறிந்துள்ளார்.
காணாமல் போன மகளைத் தேடி, ஈ-ரிக்ஷா ஓட்டுநரான தந்தையின் புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், காவல் சீருடையில் இருந்த நபர் ஒருவர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை முடுக்கிவிட்ட போது, அது அவசர உதவி ரோந்து வாகனப் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் அபிஷேக் யாதவ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவலர் அபிஷேக் யாதவை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, சிறுமியின் உடலை நதிக்கரையிலிருந்து மீட்டனர். கைது செய்யப்பட்ட காவலரை மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்குத் தர்மஅடி கொடுத்தனர். குற்றவாளியைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
