கிரிக்கெட் விளையாட்டு என்பது ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு நியாய தர்மங்களுக்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு சில வீரர்கள் செய்யும் குறுக்கு வழிகளும், ஏமாற்று வேலைகளும் அவ்வப்போது விளையாட்டு உலகையே உலுக்கி வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ூர் கிளப் கிரிக்கெட் போட்டியில், கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை யாரும் யோசித்துக்கூடப் பார்த்திராத ஒரு விசித்திரமான மற்றும் கொடூரமான ஏமாற்றுத் தந்திரம் அரங்கேறியிருப்பது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ‘நார்த் யார்க்ஷயர் அண்ட் த் டர்ஹாம்’ லீக் போட்டியில், சால்ட்பர்ன் மற்றும் நார்டன் ஆகிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பேட்டர் பந்தை எதிர்கொள்ளும்போது, பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரின் கைக்குச் சென்றது.

ஆனால், அதே வினாடியில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த பிரையன் டிவைன் என்ற வீரர், பந்து பேட்டின் விளிம்பில் உரசிச் செல்வது போன்ற ‘நிக்’ சத்தத்தை உருவாக்குவதற்காகத் தனது விரல்களால் பலமாகச் சொடக்கு போட்டுள்ளார். அந்தப் போலிச் சத்தத்தை நிஜமான சத்தம் என்று நம்பிய நடுவர், பேட்டர் பந்தை உரசிவிட்டதாகக் கருதி ‘அவுட்’ எனத் தீர்ப்பளித்துள்ளார். பேட்டர் எவ்வளவு மறுத்தும் நடுவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்தக் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பெயரை நக்கலாகச் சேர்த்து, அந்தப் பிடிபட்ட வீரருக்கு இணையவாசிகள் ‘க்ளிக்கி பாண்டிங்’ என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும், அந்த வீரர் விளையாடிய கடந்த சில போட்டிகளின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த போது, அவரது அணியின் விக்கெட் கீப்பர் வழக்கத்திற்கு மாறாக ஒரே போட்டியில் 8 கேட்சுகளைப் பிடித்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல போட்டிகளில் இவர்கள் இந்தச் சொடக்கு தந்திரத்தைப் பயன்படுத்தி எதிரணி பேட்டர்களை ஏமாற்றி விக்கெட் பறித்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் லீக் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், விளையாட்டு தர்மத்தைக் கொச்சைப்படுத்திய அந்த வீரருக்குக் கடுமையான தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“>