ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவையிலிருந்து வந்த அதிகாரி ஒருவர், புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவைக் காண வந்திருந்தார். பக்தர்கள் மேள தாளங்களுடன் தீ மிதித்துத் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதைப் பார்த்த ஆங்கிலேயன், அதை அறிவற்ற செயல் என்றும் போலியானது என்றும் ஆணவத்துடன் கிண்டல் செய்தான்.
தனது சந்தேகத்தைத் தீர்க்க, கொதித்து உருகும் ‘குங்கிலியத்தை’ குண்டத்தில் நிறையத் தூவி, இதன் மேல் நடந்து உங்கள் பக்தியை மெய்ப்பியுங்கள் என்று சவால் விட்டான். பூசாரி சிறப்புப் பூஜைகளைச் செய்த பிறகு, தீபஸ்தம்பத்திலிருந்து வந்த ஒரு பல்லி தீயில் ஊர்ந்து சென்று அம்மனின் கருவறையை அடைந்தது. அதை நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு பூசாரியும் வீரமக்களும் கொதிக்கும் குங்கிலியக் குண்டத்தில் இறங்கினர்.
அப்போது குண்டத்தின் நடுவே ஒரு பெண் தெய்வம் மண்டியிட்டு, தீ மிதிக்கும் பக்தர்களின் பாதங்களைத் தன் இரு கரங்களாலும் தாங்கிக்கொள்வதைக் கண்ட ஆங்கிலேயன் அதிர்ச்சியடைந்தான். அந்த அற்புதத்தைப் பூதக்கண்ணாடியின் வழியே பார்த்த அடுத்த கணமே அவனது இரு கண்களின் பார்வையும் பறிபோனது. இதனால் பதறிய அவன், ஊர் மக்களின் அறிவுரைப்படி அம்மனிடம் கதறி மன்னிப்புக் கேட்டான்.
அம்மனின் அருளால் உடனடியாக அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது. தன் தவறை உணர்ந்த ஆங்கிலேயன், கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூ.1,500 பணமும், தீபங்களுக்கு 6 குடம் எண்ணெயும் வழங்க ஆணையிட்டான். இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட ஆங்கிலேயனின் சுதை உருவம் பின்னாளில் சிதைந்துவிட்டாலும், அம்மனின் மகிமை இன்றளவும் பேசப்படுகிறது.
